டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லி போலிஸார் துணையுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூரத் தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். அதில் 9 பேர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இருந்து நாட்டுமக்கள் மீளாத நிலையில் வன்முறையின் போது போராட்டக்காரர்களும், அப்பாவி பொதுமக்களும் சித்திரவதைக்கு உள்ளானது தொடர்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அப்படி கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று நடைபெற்ற வன்முறையின் போது சாலைகளின் ஓரத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த 5 இஸ்லாமிய இளைஞர்களை டெல்லி போலிஸார் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில் இளைஞர்களை சுற்றிவளைத்து ஆசாதி முழக்கம் எழுப்புவாயா? என்று கேள்வி எழுப்பி, தேசிய கீதம் பாட வற்புறுத்தி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது காயமடைந்த 24 வயதான பைசன் என்ற இளைஞர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு டெல்லி கர்தம் பூரியைச் சேர்ந்த பைசன் வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் 27-ம் தேதி வியாழக்கிழமை காலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“எலும்புகள் உடைக்கப்பட்டு குண்டடி பாய்ந்த நிலையில் கொண்டுவரப்பட்ட பைசனை காப்பாற்ற முடியாமல் போனதற்கு அவரை தாமதமாக போலிஸார் அழைத்துவந்ததே காரணம். அவர் உடம்பில் இருந்து அதிக இரத்தம் வீணானது” என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது சகோதரர் நயீம் அளித்த பேட்டியில், “எனது அண்ணன் மதத்தின் பெயரால் தாக்கப்பட்டார். கொடூர தாக்குதலுக்கு ஆளான எனது அண்ணனை ஜோதி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருந்தனர். மருத்துவ சிகிச்சை இல்லாமல் வலியால் துடித்ததை எங்களால் கேட்க முடிந்தது. அவரை மீட்கச் சென்ற எங்களைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.