OLX மூலம் சமீபத்தில் அதிகமான மோசடிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் OLX-ல் வாகனம் விற்பதாக கூறி ஏமாற்றும் கும்பலிடம் சிக்கிக் கொண்டு தனது பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகாரில் கவனம் செலுத்திய கிரைம் போலிஸார் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இராணுவ அதிகாரி எனக்கூறி OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி கோடிக்கணக்கில் இந்தியா முழுவதும் மோசடி செய்துள்ளனர்.
மேலும் கொள்ளையடித்த பணத்தை கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக ஏ.டி.சி சரவண குமார் தலைமையில் தனிப்படை போலிஸார் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு தனிப்படை போலிஸார் ஒரு வாரம் முகாமிட்டு அந்த கும்பலைச் சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். போலிஸார் கைது செய்ய முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் போலிஸ் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மீது சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ளன. பணப்பரிவர்த்தனை செயலி மூலம் அனைவரிடமும் கொள்ளை அடித்துள்ளனர். பணம் சென்ற வங்கிக் கணக்கை தீவிரமாக தேடி சைபர் கிரைம் போலிஸார் உதவியுடன் கொள்ளையர்களை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.