டெல்லியில் அமைதியாக நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையாக மாற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இதுவரை தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாஜ்பூர் பகுதியில் பல இடங்களில் வாகனங்கள், கடைகள், வீடுகள் தீ வைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. இந்நிலையில் போலிஸார் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் சி.ஏ.ஏவிற்கு எதிராக போராடுபவர்களை மட்டும் கைது செய்வது, தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி போலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மத்திய அரசே பெற்றிருப்பதால் மோடி அரசாங்கம் இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நடைபெற்று வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலிஸார் தவிக்கின்றனர். மூத்த அதிகாரிகளின் உத்தரவிற்காகக் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக கண்ணீர்ப்புகைக் குண்டு வீசுவதா அல்லது லத்தியால் தாக்குவதா என்ற தெளிவான முடிவில் அவர்கள் இல்லை. இந்த பிரச்னை தொடர்பாக அமித்ஷாவிடம் நான் பேசுவேன். இறந்த தலைமைக் காவலர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நம் மக்கள். இது நல்ல சூழல் அல்ல.
அதுமட்டுமின்றி இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசவுள்ளேன். டெல்லிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் டெல்லி எல்லையை சிறிது காலம் மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் போலிஸ் உயரதிகாரிகளுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.