குறுகிய நோக்கமுடையவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான விலையை மக்கள் கொடுத்து வருகிறார்கள் என விமர்சித்துள்ளார் ப.சிதம்பரம் எம்.பி.,
டெல்லி மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. CAA ஆதரவாளர்கள் CAA-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் கற்களை வீசித் தாக்கினர்.
இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டன. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலிஸார் வன்முறையை கலைத்தனர். இந்த வன்முறையில் ஒரு தலைமை காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“டெல்லியில் நேற்று நடந்த வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. குடியுரிமை திருத்தச் சட்டம் பிரிவினையை ஏற்படுத்தும் என எச்சரித்தோம்.
எங்களின் எச்சரிக்கை செவிடர்கள் காதில் விழவில்லை. உணர்ச்சியற்ற, குறுகிய நோக்கமுடையவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்ததற்கான விலையை மக்கள் கொடுத்து வருகின்றனர்.
சிஏஏ-வுக்கு எதிராகப் போராடுபவர்களின் குரல்களைக் கேட்டறிந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அச்சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.