மணிப்பூர் மாநிலத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி14ம் தேதியில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 22ம் தேதி அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில், கேட்கப்பட்ட கேள்விகள்தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரைக என்றும், இந்தியாவை கட்டமைக்க நேரு எடுத்த நான்கு தவறான முடிவுகளை பட்டியலிடுக என்றும் 4 மதிப்பெண்களுக்கு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக 12ம் வகுப்பு தேர்வெழுதிய சகோதரியின் வினாத்தாளை அக்கீ சோரோகைபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை கண்ட பலர் பா.ஜ.கவுக்கும், வினாத்தாளை தயாரித்த அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸை சேர்ந்த ஜாய்கிஷன், “மாணவர்களிடையே தவறான அரசியல் எண்ணத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பேசியுள்ள, மணிப்பூர் மாநில பா.ஜ.க தலைவர் நிம்பஸ் சிங், “நேரு குறித்து கேட்கப்பட்ட கேள்வியில் எந்தத் தவறுமில்லை” என கூறியுள்ளார்.