டெல்லி ஷாஹீன்பாக்கில் 74 நாட்களாக அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மவுஜ்பூர் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளையில் டெல்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா தலைமையில் சி.ஏ.ஏ ஆதரவு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி துவக்கத்தில் பேசிய கபில் மிஸ்ரா நடைபெற்றுவரும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சைத் தொடர்ந்து பா.ஜ.கவினர் மற்றும் இத்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ.,விற்கு எதிராக போராடுபவர்களை நோக்கி கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த மாஜ்பூர் பகுதி போராட்டக்காரர்கள் பதிலுக்கு கற்களை வீசினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதையடுத்து அங்கு போலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களை துரத்தி அடித்தனர்.
இந்த கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தார். இதனையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
அவரைத் தடுக்க வந்த போலிஸ்காரரின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோவும், இஸ்லாமியர் ஒருவரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தும் புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 160 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. கூடுதல் மத்திய படையை இன்று அந்தப் பகுதிக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் போராட்டம் குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவத்தை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு நடத்தியதாக அரசியல்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.