அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்தியவிற்கு அரச முறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இன்று அகமதாபாத் விமானம் நிலையம் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகளை இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவருடன் அவரது மனைவி மெலானியாவும், மகள் இவான்கா, மருமகன் ஜேரித் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்ப்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் ’நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக 1.1 லட்சம் மக்களை மைதானத்தில் திரட்டி வைத்திருந்தது குஜராத் அரசு.
மைதானத்தில் பேசிய ட்ரம்ப், ’நமஸ்தே’ என்று கூறி உரையை துவக்கினார். இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர் என்றும், இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது என்றும் புகழ்ந்து பேசினார்.
ட்ரம்பின் இந்த உரையின் போது உச்சி வெயில் உட்கார முடியாமல் தவித்து வந்த மக்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியேறத் துவங்கினார். மக்களைச் சமாதானப்படுத்தி பா.ஜ.க.,வினர் அமரவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்து வீனானது.
நிகழ்ச்சியின் துவகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கும் மேல் இருந்த கூட்டம் டிரம்ப் பேசி முடிக்கும் போது பாதியாக குறைந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.