தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாஹீன் பாக் போரட்டத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கும் போராட்டம் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி வட கிழக்கு டெல்லியில் முக்கிய சாலையான மாஜ்பூர் பகுதியில் 1500க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை இரவு முதல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாவி பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரத்து பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பா.ஜ.கவினர் சிலர் சி.ஏ.ஏ.,விற்கு எதிராக போராடுபவர்களை நோக்கி கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த மாஜ்பூர் பகுதி போராட்டக்காரர்கள் பதிலுக்கு கற்களை வீசியுள்ளனர்.
பல இடங்களில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தின்போது உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அவரைத் தடுக்க வந்த போலிஸ்காரரின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வன்முறையில் கோலக்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் ரத்தன் லால் உயிரிழந்ததாகவும், ஒருவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் வன்முறைக் கட்டுப்படுத்த போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கபில் மிஸ்ராவே காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் டெல்லியில் போராட்டம் வலுத்துள்ளது இந்திய அரசுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.