உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி ஆகிய கிராமங்களில் பூமிக்கு கீழே, 3500 டன் அளவுக்கு தங்கச் சுரங்கங்கள் உள்ளதாக வெளியான செய்தி கடந்த வாரம் இந்திய முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 3500 டன் தங்க படிமம் எதுவும் இல்லை. 52,806 டன் தாது மட்டுமே இருப்பதாகவும் அதிலிருந்து வெறும் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான பொய் செய்தியை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரப்பினர்.
சோன்பத்ராவில் தங்கச் சுரங்கம் இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அம்மாவட்டத்தின் 200க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மக்கள் ஃபுளோரின் படிம நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோயால், சோன்பத்ராவில் உள்ள 269 கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் கை, கால் , மூட்டு வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயின் தாக்கம் தாளாமல் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எலும்பு தொடர்பான உபாதைகளால் ஏற்படுத்தும் இந்த ஃபுளோரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணியாக நீர் மாசுவாகவும், தொழிற்சாலை கழிவாகவும் இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இந்த நோய் தொற்றின் தீவிரம் குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமை ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், மாநிலத்தில் உள்ள யோகியின் பா.ஜ.க அரசோ, மாவட்ட நிர்வாகமோ எந்த ஒரு சீரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.
தங்கச்சுரங்கம் இருப்பதாக பரப்பிய பா.ஜ.க தொண்டர்களுக்கு சோன்பத்ராவில் பல ஆண்டுகளாக ஃபுளோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் யாரும் தங்களின் கண்களுக்கு தெரியவில்லையா என்றும் சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.