புனேயில் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தவர்களுக்கு வயதான பெண் ஒருவர் துணிச்சலுடன் பாடம் கற்றுக்கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும் பகுதிகளில், நடைபாதையில் இருசக்கர வாகனங்களை இயக்கும் போக்கு இந்தியாவின் பெரும்பாலான நகரங்களிலும் இருக்கிறது.
பாதசாரிகளுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறோம் என்பதை உணராமலேயே இருசக்கர வாகன ஓட்டிகள் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். இதனால், பல சமயங்களில் விபத்துகளும் ஏற்படுவதுண்டு.
இதுபோல, புனே எஸ்.என்.டி.டி கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் பலரும் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதும், பலர் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதைத் தடுக்க புனே போக்குவரத்து போலிஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், போக்குவரத்து போலிஸார் இல்லாத சமயங்களில் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளால் நடைபாதையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டவர்களில் நிர்மலா கோகலே எனும் பெண்மணியும் ஒருவர்.
சமீபத்தில், நிர்மலா கோகலே நடைபாதையின் குறுக்கே நின்றுகொண்டு, எதிரே வேகமாக பைக்கில் வந்தவரிடம், “தொடர்ந்து செல்ல வேண்டுமானால் என்னை மோதி விட்டுச் செல்; இல்லையெனில் சாலையில் இறங்கி பைக்கை ஓட்டிச் செல்” எனக் கடுமையாக எச்சரித்தார்.
இதனை எதிர்பார்க்காத அந்த இளைஞர், நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி, பைக்கை ஓட்டிச் சென்றார். நிர்மலா கோகலேயின் இந்தச் செயலுக்கு பலத்த ஆதரவு எழுந்துள்ளது.
நிர்மலா கோகலே, இருசக்கர வாகன ஓட்டியை கண்டித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.