குஜராத்தில் உள்ள ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்வி நிறுவன விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதா என்பதை அறிய, அவர்களின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த விவகாரம் கடும் கண்டனங்களுக்கு ஆளானது.
அதன் பிறகு, கல்வி நிறுவனத்தின் கோவிலைச் சேர்ந்த சுவாமி க்ருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி என்பவர் மாதவிடாய் குறித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் அடுத்த பிறவியில் ஆண்கள் காளைகளாகப் பிறப்பார்கள் என்றும், மாதவிடாய் ஆன பெண்கள் கணவருக்காக சமைத்தால் அவர்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாயாகப் பிறப்பார்கள் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ள அந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், சாமியாரின் இந்தக் கருத்தை விமர்சிக்கும் வகையில் ஹுனாலி குல்லர் ஷ்ராஃப் என்ற பெண், முந்தைய பிறவியில் தனது கணவருக்கு மாதவிடாயின்போது சமைத்த பெண்கள் தற்போது பெண் நாயாகப் பிறந்துள்ளார்கள் எனக் கூறி தான் வளர்க்கும் நாய்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.
இதற்கு பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான கோபால் கிருஷ்ண அகர்வால், இந்த இரு நாய்களில் நீங்கள் எந்த நாய்? என கேட்டு கமன்ட்டில் பதிவிட்டிருக்கிறார். கோபால் கிருஷ்ணாவின் இந்த பதிவை பெண்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர், கோபால் கிருஷ்ணாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “பொதுவெளியில் ஒரு பெண்ணை குறிப்பிட்டு வன்மமாக பேசியிருக்கும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் தன்னை நினைத்து தானே அவமானப்பட்டுக் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தன்னுடைய பதிவுக்கு எவ்வித மறுப்பும், மன்னிப்பும் தெரிவிக்காமல் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் தான் ஒரு இந்து என்றும் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு, மாதவிடாயின் போது கணவருக்கு சமைத்து கொடுத்ததால் தற்போது பூனையாக பிறந்திருக்கிறீர்கள் என ஸ்வரா பாஸ்கர் மற்றும் ஷுனாலியையும் குறிப்பிட்டுள்ளார் அகர்வால்.
இதற்கு , தூய்மையான இந்து என பெருமைகொள்ளும் எவரும் பெண்களை இழிவுபடுத்துவதில்லை என ஷுனாலி எதிர்வினையாற்றி இருக்கிறார்.