மோடி அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒருபகுதியாக கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி, டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தின் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
அந்த வன்முறையில் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு காவல்துறையினர் தீவைத்தனர். அதுமட்டுமின்றி போலிஸார் ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்த தாக்குதல் நடைபெற்று ஒருமாதத்திற்குப் பிறகு போலிஸார் மாணவர்களை திட்டமிட்டு தாக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலிஸார் லத்தியால் தாக்குவது பதிவாகியுள்ளது. போலிஸார் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் தெரியவில்லை.
மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதற்கு, நாடு முழுவதும் கடும் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், டெல்லி போலிஸார் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையின் நடவடிக்கையை பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறை வெளியிட்ட வீடியோவை ‘இந்தியா டுடே’ தனியார் தொலைக்காட்சி முதன்முதலில் ஒளிபரப்பியது. அதில் மாணவர்கள் கற்களைக் கொண்டு போலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்களின் இந்த தாக்குதலால் தான் வன்முறை மூண்டதாகவும் செய்தியை திரித்து வெளியிட்டனர்.
உண்மையாகவே போராட்டத்தைக் கலவரமாக்கியது மாணவர்களா? அல்லது டெல்லி போலிஸாரா என்ற கேள்வி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளானது. இந்துத்வா கும்பல் மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் பலரும் மாணவர்களை குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, ‘இந்தியா டுடே’ வெளியிட்ட செய்தி வீடியோவில், மாணவர் ஒருவரின் புகைப்படக் காட்சியைக் குறிப்பிட்டு அதில் அந்த மாணவர் கையில் வைத்திருப்பது கற்கள் எனவும் அவர்தான் ஜாமியா துப்பாக்கிச் சூட்டில் காயமானவர் என்றும் பலர் போலிச் செய்திகளை பரப்பி வந்தனர்.
பரப்பப்படும் இந்தத் தகவல் உண்மையானதா எனக் கண்டறிய ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை கண்டறியும் செய்தி தளம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட வீடியோவின் High Quality வீடியோவை சோதித்துப் பார்த்தது.
அதில், அந்த மாணவர் தோல் நிறத்தில் உள்ள பணப்பையை (Wallet) கையில் வைத்துள்ளார். ஒரு மாணவர் தவறவிட்டதை பத்திரமாக எடுத்துக்கொடுப்பதற்காக கையிலேயே வைத்திருக்கிறார். இதனைப் பிடித்துக்கொண்டுதான் சிலர் அது கல் என சமூக வலைதளங்களில் பொய்யைப் பரப்பி வருகின்றனர். இதுதொடர்பான உண்மைப் புகைப்படத்தையும் அந்த செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த வீடியோவில் உள்ள மாணவர் பெயர் சதாப் ஃபரூக் என்றும் அவர் கடந்த ஜனவரி 30ம் தேதி பல்கலைக்கழகப் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர் எனவும் கூறப்பட்டது.
ஆனால் அந்தத் தகவலும் உண்மையில்லை என்றும் ஜாமியாவில் போலிஸார் நடத்திய தாக்குதல் நடைபெற்ற அன்று சக மாணவரின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘இந்தியா டுடே’ செய்தி தளம் அந்த வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. போலி செய்திகள் மற்றும் அவதூறுகள் மூலம் போராட்டத்தையும் போராடுபவர்களையும் கொச்சைப்படுத்த நினைக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பலுக்கு இந்தச் செய்தி பெரிய ஏமாற்றம் அமைந்துள்ளது.
அதன் காரணமாக விரக்தியடைந்த இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள், ஆல்ட் நியூஸ் செய்தி தளம் பொய்ச் செய்தி தளம் (#FakeItLikeAltNews) என ட்விட்டரில் அவதூறு பரப்பிவருகின்றனர். இந்த கருத்தைப் பரப்புவோரில் பெரும்பாலானோரின் ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது.