“டெல்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தேவை. தேர்தலுக்கு முந்தைய பூசல்களை மறந்துவிடுவோம்.” என டெல்லியின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்ற பின்னர், விழா மேடையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த வெற்றி எனது வெற்றி அல்ல. உங்களது வெற்றி. டெல்லியின் மகன் முதல்வராகியுள்ளேன். நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்காக மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களுக்காகவும் உழைப்பேன்.
டெல்லியின் 2 கோடி பேரும் எனது குடும்பத்தினர் தான். ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் என எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்குமான முதல்வராகச் செயல்படுவேன். டெல்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தேவை. தேர்தலுக்கு முந்தைய பூசல்களை மறந்துவிடுவோம்.
என்னை விமர்சித்தவர்களை நான் மன்னித்துவிட்டேன். அரசியலின் புதிய வழியை நாடு பார்த்துள்ளது. நேர்மறையான எங்களின் அரசியல், பல மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. டெல்லியை உலகின் முதன்மை நகராக மாற்றுவேன்.” எனத் தெரிவித்தார்.