வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுவதைத் தடுப்பதாகக் கூறி மத்திய பா.ஜ.க அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன்படி, அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
பல்வேறு குழப்பங்களோடும் குளறுபடிகளோடும் தொடங்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணி முழுவதுமாக நிறைவடைந்து மக்கள் அறிந்துகொள்வதற்காக அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படிருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சர்வரில் இருந்த அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திடீரென மாயமான இந்தத் தகவலால் அப்பகுதி மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தகவலையும் இந்த பா.ஜ.க அரசு தொலைத்துவிட்டதாகவும், மத்திய அரசின் டிஜிட்டல் தகவல் பரிமாற்றத்தின் தோல்வியையே இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விவரங்களைப் பார்க்க முடியவில்லை. விரைவில் கணினி சர்வர் கோளாறு சரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.