டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 70 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே முன்முனைப் போட்டி நிலவியது.
இத்தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 57 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருவதால் 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், “தலைநகர் வழங்கியிருக்கும் தண்டனை... துப்பாக்கிச் சூடு நடத்தச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.