குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதன்முதலாக மாணவர் போராட்டத்தைத் தொடங்கியதே ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்தான்.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க அரசு போலிஸார் மூலம் வன்முறையைத் தூண்டி மிகப்பெரிய மோதலை உண்டாக்கியது. அப்போது டெல்லி போலிஸார் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலிஸார் பல மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பல்கலைக்கழகம் சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதில் இருந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இன்று குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டனர்.
பேரணிக்காக மாணவர்கள் கல்லூரி நுழைவுவாயிலில் திரண்ட நிலையில் மாணவர்கள் கல்லூரி சாலையை தாண்டமுடியாத வண்ணம் போலிஸார் இரும்பு வேலிகளை அமைத்து சாலையை தடுத்துவைத்திருந்தனர்.
அப்போது பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் போலிஸாரின் இரும்பு வேலிகளை தாண்டி பேரணி செல்ல முயன்றனர். அப்போது மாணவர்களை போலிஸார் தடுக்கத் தொடங்கியதால் உருவான வாக்குவாதம் மோதலாக மாறியது.
அப்போது மாணவர்களை தடுத்துநிறுத்துவது என்கிற பெயரில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாணவிகள் உட்பட பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.