டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலிஸார் 40 ஆயிரம் பேரும், மத்திய ஆயுதப்படை போலிஸார் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 19 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
மேலும் யமுனை நதியில் படகு மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்களுக்காக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் 3,75 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், அதில் 545 வாக்குச்சாவடிகள் மிக மிகப் பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.