மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்கு 3 விவசாயிகளை பணியில் அமர்த்தியுள்ளார். வேலைகள் முழுந்ததும் 2.5 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் 1 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கொடுத்த வாக்குறுதியின்படி, முழுத் தொகையை தரும்படியும் இல்லையென்றால் நீதிமன்றம் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து மீதம் தரவேண்டிய தொகையை தங்களின் கிராமத்தில் வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார் ஒப்பந்ததாரர்.
அதனை நம்பி அந்த மூன்று விவசாயிகள் உட்பட 6 பேர் தார் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு விவசாயிகளை தாக்க திட்டமிட்டிருந்த ஒப்பந்ததாரர், அடியாட்களை ஏவி விட்டுள்ளார்.
காரில் வந்த விவசாயிகள் மீது ஒப்பந்ததாரரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த விவசாயிகள் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர். ஆனாலும் விவசாயிகளை விடாத அடியாட்கள் பின்னால் துரத்தி வந்த நிலையில் வாகன நெரிசலால் பாதி வழியிலேயே விவசாயிகளின் கார் நின்றுள்ளது.
அதனைச் சாதகமாக பயன்படுத்திய அடியாட்கள் காரில் உள்ளவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்றும், தார் கிராமத்தில் இருந்து குழந்தயைக் கடத்திவிட்டதாகவும் கூச்சலிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை நம்பிய அங்கிருந்த மக்களும் விவசாயிகள் 6 பேரையும் கையில் கிடைத்த கல், கட்டைகளை வைத்து கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து விவசாயிகளை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய போலிஸார் தெரிவித்துள்ளதாவது, “கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்ட விவசாயி கணேஷ் காசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் உஜ்ஜைனில் உள்ள லிம்பா பிப்லியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான கிராகியா கிராமத்தைச் சேர்ந்த அவ்தார் சிங், புவான் சிங் மற்றும் ஜாம் சிங் ஆகியோர் மீது கொலை மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பொதுமக்கள் 15 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.
பொய்யான தகவலை நம்பி அப்பாவி விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.