சருமத்தை வெள்ளையாக்கும் மருந்து, முடி உதிர்தல் அல்லது நரைத்தலை கட்டுப்படுத்தும் மருந்து போன்ற தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு இனி 5 ஆண்டு சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் விதிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
மருந்துகள் மற்றும் ‘அதிசய’ வைத்திய (ஆட்சேபிக்கத்தக்க விளம்பரங்கள்) சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முன்வந்துள்ளது.
அதன்படி, வெள்ளை சருமத்திற்கான க்ரீம், காது கேளாதோருக்கு உடனடி தீர்வு தரும் சிகிச்சை, உயரத்தை அதிகரித்தல், முடி உதிர்தல் அல்லது நரைத்தலுக்கான தீர்வு, உடல் பருமனை குறைத்தல் போன்றவற்றுக்கு மருந்து தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு இனி ரூபாய் 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தச் சட்டத்தில் 54 நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தக்கூடாது என இருந்தது. அதை மத்திய அரசு தற்போது 78 ஆக உயர்த்தியுள்ளது.
புதிதாக சருமத்தை வெள்ளையாக்க, காது கேளாமையை குணப்படுத்த, உயரத்தை அதிகரிக்க, முடி உதிர்தல் அல்லது நரைத்தலை தடுக்க, உடல் பருமனை குறைக்க, பாலியல் உறுப்புகளின் அளவு மேம்பாடு, பாலியல் செயல்திறனின் காலத்தை அதிகரிப்பது என விற்பனைக்கு வரும் மருந்துகளையும் இனைத்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட 78 நோய்களை குணப்படுத்தும் நோக்கம் கொண்ட மருந்துகள் மற்றும் தயாரிப்புகளின் விளம்பரங்களை தடை செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அதேபோல, குறிப்பிட்ட நோய்க்கு மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதைக் குறிக்கும் அடையாள பலகைகள் அல்லது அறிவிப்புக்கு இந்த சட்டம் பொருந்தாது. மேலும், விஞ்ஞான அல்லது சமூக நிலைப்பாட்டில் இருந்து சிக்கல்களைக் கையாளும் கட்டுரை அல்லது புத்தகம், அரசாங்க விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு இந்தச் சட்டம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின் படி, முதல் குற்றத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் முன்மொழியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த குற்றங்களுக்கு, சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் மற்றும் அபராதம் ரூ.50 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.