குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே உள்ள ஷாகீன் பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வலதுசாரி ஆதரவாளரான குன்ஜா கபூர் என்ற பெண் பர்தா அணிந்து வந்து போராட்டக்காரர்களோடு அங்கமாகி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
இதனைக் கண்டு சந்தேகித்த பெண்கள், குன்ஜா கபூரை மடக்கிப் பிடித்து கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டுள்ளனர். அதன் பின்னர் அந்தப் பெண்ணை போராட்டக்காரர்கள் போலிஸிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். மேலும், இந்த குன்ஜா கபூரை பிரதமர் மோடியும் ட்விட்டரில் பின்தொடர்கிறார்.
போராட்டக்காரர்கள் இந்தப் பெண்ணை விசாரிக்கும் வீடியோவும், போலிஸார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போலிஸார் விசாரித்ததில், ‘பர்கா’ என்ற பெயரைச் சொல்லி போராட்டக்களத்தில் நுழைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஷாகீன்பாக்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே, இந்தப் பகுதியில் இந்துத்வா ஆதரவாளரால் துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், அதேபோல போராட்டக்களத்துக்குள் மீண்டும் வலதுசாரி ஆதரவு பெண் புகுந்து சதித்திட்டத்தை செயல்படுத்த முற்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவேண்டும் என இஸ்லாமிய பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.