மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தப் போராட்டங்களையடுத்து இதுவரை 5 மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளன.
இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்தும் வேலையில் இந்துத்வா கும்பல்கள் இறங்கியுள்ளன. குறிப்பாக, சமீபத்தில் டெல்லி ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுவோர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் மகாராஷ்டிராவில் வைக்கப்பட்ட கட்சியின் விளம்பரத் தட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்று தீவிர இந்துத்வா கருத்துகளைக் கையில் எடுத்து வரும் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் சார்பில் பிப்ரவரி 9-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்துப் பேரணி செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேரணிக்கு “பாகிஸ்தான், பங்களாதேஷ்காரர்கள் ஊடுருவலுக்கான நாடு இந்தியா அல்ல” என்ற கோஷத்துடன் பேரணி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே அவருடைய மகன் அமித் தாக்கரே படங்கள் வைத்து மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர். அந்தப் பேனரில், “பாகிஸ்தான் - பங்களாதேஷியர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில், எங்கள் ஸ்டைலில் வெளியேற்றப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற பேனர்களை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என்றும் பேனர் வைத்த நபர்களை கைது செய்யவேண்டும் எனவும் ஜனநாயன அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் பேனரால் அப்பகுதி இஸ்லாமிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.