இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்குக் காரணம் வெள்ளைக்காரர்கள்தான்; காந்தி அல்ல என பா.ஜ.க எம்.பி அனந்த குமார் ஹெக்டே பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அப்போது பேசிய அவர்,“மகாத்மா காந்தி நடத்தியது உண்மையான சுதந்திரப் போராட்டமே கிடையாது. அது ஒரு நாடகம். முதலில் அவரை எவ்வாறு மகாத்மா என அழைக்கிறார்கள். அவர் எப்படி நாட்டின் மகாத்மாவாக உயர்ந்தார். வரலாற்றைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.
சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயர்களின் அனுமதியுடனே நடத்தப்பட்டிருக்கிறது. சத்தியாகிரகம் செய்ததால் அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்லவில்லை. வெறுப்பினாலே சென்றிருக்கிறார்கள். சுதந்திரத்துக்காக நடந்தது ஒரு நேர்மையான போராட்டமே இல்லை.” என அனந்தகுமார் ஹெக்டே பேசியுள்ளார்.
இதனையறிந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் அனந்தகுமாரின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்கில், “ஆங்கிலேயர்களின் தொண்டர்களாக இருப்பவர்கள் மகாத்மா காந்திக்கு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பா.ஜ.கவின் பெயரை நாதுராம் கோட்சே கட்சி என மாற்றிக்கொள்ளலாம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.