அசாம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தில் துலியாஜன் என்ற பகுதியை ஒட்டியுள்ள புர்ஹிதிஹிங் ஆற்றின் கரையோரத்தில் அரசு நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம் எண்ணெய்க் குழாய்கள் அமைத்துள்ளது.
இந்நிலையில், முறையான பரமாரிப்பு இல்லாமல் செயல்பட்டுவந்த எண்ணெய்க்குழாய் நேற்றைய தினம் திடீரென வெடித்து தீ பிடித்து எரிந்தது. குழாயில் இருந்து வெளியேறிய எண்ணெய் முழுவதும் ஆற்றின் மேற்பரப்பில் பரவி பெரும் தீயாக மாறியது.
எண்ணெய்க் குழாய் வெடிப்புகள் சரிசெய்யப்படாததால், எண்ணெயில் தீப்பற்றி தீப்பிழம்பாக ஆற்றின் மீது படர்ந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பயங்கரமான புகையைக் கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடன் தகவல் கொடுத்துள்ளனர்.
கிராம மக்கள் புகார் கொடுத்தும் தீயை அனைக்கப் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இதனால் பெரிய அளவிலான சுற்றுசூழல் மாற்றம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி-யின் கேஸ் எடுக்கும் மையத்தில் கேஸ் குழாய் வெடித்து வாயு வெளியேறி தீப்பற்றியது. அதனை தடுக்கமுடியாமல் 12 மணிநேரமாக ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.