கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் முறைப்படி, திருமணத்தின்போது மணமுடிக்கும் பெண்ணுக்கு வரதட்சணை (மெஹர்) கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி மணப்பெண் கேட்கும் எதைவேண்டுமானலும் வாங்கிக்கொடுக்க மணமகண் இஜாஸ் ஹக்கிம் தயாராக இருந்துள்ளார்.
தீவிர வாசிப்பாளராக இருக்கும் அஜ்னா நசீம் தனக்கு மெஹராக 80 புத்தகங்களை பரிசளிக்கவேண்டும் என பட்டியல் ஒன்றைக் கொடுத்துள்ளார். இஜாஸ் ஹக்கிம் தனது வருங்கால துணைவி கேட்ட பரிசு பிடித்துப் போய், அவர் கேட்ட பட்டியலில் உள்ள புத்தகங்களை தேடிக் கண்டுபிடித்து வாங்கியுள்ளார்.
மணப்பெண் கேட்ட 80 புத்தகங்ளோடு பைபிள், குரான், பகவத் கீதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட புத்தகங்களையும் சேர்த்து மொத்தம் 100 புத்தகங்களாக வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் இஜாஸ் ஹக்கிம்.
இந்தப் புத்தகங்களை வழங்குவதுபோல வெளியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தனக்கு வரதட்சணையாக பணமோ, நகையோ கேட்காமல் புத்தகங்கள் கேட்டு வாங்கிய மணமகள் அஜ்னாவிற்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது.