தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த விபத்து மற்றும் தற்கொலைச் சம்பவங்கள் குறித்த அறிக்கையில் நீரில் முழ்கி உயிரிழந்தவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2018ம் ஆண்டில் இந்தியாவில் நீரில் மூழ்கி 30,187 பேர் உயிரிழந்துள்ளனர். இது சராசரியாக ஒருநாளைக்கு 83 பேர் வீதம். இறந்தவர்களில் 52 சதவீதம் பேர் அதாவது 15,686 பேர் 18 முதல் 45 வயதுடையவர்கள். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3,968 பேர் 13% நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இந்த மரணங்களில் படகு கவிழ்ந்து 211 பேரும், நீர் நிலைகளில் வாகனம் கவிழ்ந்து 19,696 பேரும் மற்றும் இதற விபத்துகளில் 9,952 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 4,542 பேர் 15% நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அடுத்து மகாராஷ்டிரா 4,516 பேரும் கர்நாடகா 2,486 பேரும், தமிழ்நாடு 1,785 பேரும் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 70% கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் குளம், ஏரி, ஆறு மற்றும் நீர்த்தேக்கம் போன்ற ஏதேனும் நீர்நிலைகளை கொண்டுள்ளன. அதில் பெரும்பாலானவை பாதுகாப்பற்றவை, மேற்பார்வை செய்யப்படாதவை. இது, நீரில் மூழ்கும் சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என சமூக ஆரவலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.