2019ம் ஆண்டிற்கான ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்தகால ஆட்சியின் போது மோடி அரசு மேற்கொண்ட ஜம்மு - காஷ்மீர் விவகாரம் மற்றும் அரசியல் ரீதியிலான முடிவுகள் மற்றும் போராட்டங்கள், போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் போன்றவையே இந்தியாவின் இத்தகைய சரிவுக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
பொருளாதார புலனாய்வு பிரிவு அமைப்பின் அறிக்கை இந்திய மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 2 ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த அனைவருக்கும் நமது நாட்டில், ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்திருப்பது தெரியும்.
இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே ‘துக்கடே துக்கடே’ கும்பலை சேர்ந்தவர்கள். ஜனநாயக குறியீடுப் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கிள்ளது.
இந்தியா அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதும், இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது. இது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசையை அறிவிக்கும் அபாய ஒலியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி, “உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்துகிறது. வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது” என தனது கருத்தையும் தெரிவித்திருந்தார்.