பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ தரப்பு, பெல்ட் வெடிகுண்டு விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது. அதனைப் படித்த நீதிபதிகள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கண்டணம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த அறிக்கைக்கும் இன்று தாக்கல் செய்த அறிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வாரம் நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ பழையை அறிக்கை விபரங்களையே மீண்டும் தாக்கல் செய்திருப்பதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்து, புதிய விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை, லண்டன், ஹாங்காக் நாடுகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறும் சி.பி.ஐ என்ன தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் நீதிபதிகள் சி.பி.ஐ தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ வழக்கறிஞர் கடிதங்கள் எழுதப்பட்டு வருவதாகக் கூறினார்.
பின்னர் வாதிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பெல்ட் வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் விசாரணை முடியும் வரை அவருக்கு வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்திவைத்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசும், ஆளுநரும் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன் மீது தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பபினர். அது குறித்து இரண்டு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.