இந்தியாவில் 70 சதவீத ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 4 மடங்கு அதிகம் என ஆக்ஸ்பாம் உரிமைகள் குழு வெளியிட்ட 'டைம் டு கேர்' என்ற ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்பாம் வெளியிட்ட இந்த தகவல் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் நிலவும் மந்தநிலை காரணமாக பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
பல்வேறு சிறு - குறு தொழில்களும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் தங்களின் லாபத்தை மேலும் மேலும் அதிகப்படுத்துவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்ஸ்பாம் உரிமைகள் குழு அறிக்கையை மேற்கொள் காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை கடுமையாக விமர்த்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் ஏழைகளிடம் இருந்து செல்வ வளங்களைத் திருடி தனது முதலாளித்துவ நண்பர்களாக இருக்கும் பெரும் முதலாளிகளிடமும், அவர் சார்ந்திருக்கும் அதிகாரம் படைத்த தரகர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.