இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.
மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். இந்தச் சூழலில் மத்திய அரசு பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் தேக்க நிலையில் தவிக்கும் பொருளாதாரம் மீண்டும் வருவதற்கு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், அதனைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவிகிதம் தான் இருக்கும் என தெரிவித்துள்ளது.
IMF-இன் இந்த கணிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மோடி அரசை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8%-க்கும் கீழே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த கணிப்பிற்காக சர்வதேச நிதியம் மற்றும் அதன் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் மீது மத்திய அரசு குற்றம் சுமத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.