குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் மோடி பதிலளிக்கத் தயாரா என சவால் விடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த தகவல்கள் பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்கக் கூடிய சட்டம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நம்மில் பலர் அது பலரது குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
மேலும், தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் 5 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொலைக்காட்சியில் கேள்வி-பதில் விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தயாரா?
இந்த விவாதத்தை மக்கள் நேரில் பார்த்த பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை எடுக்கட்டும். இதற்கு பிரதமர் மோடி நிச்சயம் சாதகமான பதிலை அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
ஏனென்றால் பிரதமர் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு தனது நிலைப்பாட்டைப் பேசி வருகிறார். விமர்சனங்களையும், கேள்விகளையும் தவிர்ப்பதால், யாராலும் பிரதமரிடம் நேரடியாக விமர்சனங்களை முன்வைக்க இயலவில்லை. ஆனால், நாங்கள் தினமும் ஊடகங்களைச் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.