இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவதற்கு பெரும் சிரமமாக உள்ளதாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகக் கூறினார். அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்கவேண்டும். இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் தொழில் முறையில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், பல தடைகளைத் தாண்டி தொழில் நடத்துவது பெரும் சவாலாக உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை சீரமைக்காமல் உள்ளது. இதனால் டாடா சன்ஸ் சந்திரசேகரன் போன்ற பல தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது குறித்து அஞ்சுகின்றனர். இனிமேலாவது விழித்துக்கொண்டு மத்திய அரசு சீரான திட்டங்களை வகுக்குமா எனும் எதிர்ப்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.