மகாராஷ்டிரா பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், ‘ஆஜ்கா சிவாஜி - நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், “ஆஜ்கா சிவாஜி : நரேந்திர மோடி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதனை ஒரு அவமானகரமானதாக கருதுகிறோம்.
சிவாஜி மகாராஜை விட பிரதமர் மோடியை சிறந்தவராகக் கருதுகிறார்களா? சத்ரபதி சிவாஜியின் சந்ததியினர் மோடியை அவருடன் ஒப்பிட விரும்பினால் அவர்கள் அதற்கான காரணத்தை கூறவேண்டும்.
அதுமட்டுமின்றி, சிவாஜி மகாராஜனை யாருடனும் ஒப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல. பிரதமரை திருப்திப்படுத்தவே சில அடிமைகள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த புத்தகம் தடை செய்யப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
சத்ரபதி சிவாஜியுடன் மோடியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.