கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மராடு பகுதியில் எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு இருந்தன.
இந்த கட்டடம் மாநகராட்சி நீர்நிலைகளை ஆக்கிரமித்தும், சுற்றுச்சூழல் விதிகளை மீறியும் கட்டப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை. கேரளாவில் இதுவரை பெய்த மழை வெள்ளத்தால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சேதத்தை சந்தித்துள்ளது. இனி வரும் காலங்களில் அதுபோல அழிவு ஏற்படுமாயின் கேரள தேசம் தாங்காது எனக் கூறி நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
இதனையடுத்து முதல்கட்டமாக இன்று காலை 11 மணிக்கு ஹெச் டூஓ ஹோலி பெய்த் அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு ஆல்பா செரைன் அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது. முன்னதாக, இந்த கட்டடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன.
அதுமட்டுமின்றி, கட்டட கழிவுகள் அருகில் உள்ள ஏரியில் விழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், கட்டடங்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து போராட்டங்கள் நடப்பதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டடங்கள் இடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.