இந்திய பொருளாதாரம் கடும் தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நலிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடி வாங்கியுள்ளது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்து மக்களின் கோபத்திற்கு மோடி அரசு ஆளாகியுள்ளது.
மத பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு, பொருளாதாரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பொருளாதாரத்தை முன்னேற்றும் விவகாரத்தை அரசு குளிர்பதனக் கிடங்கில் பாதுகாக்கிறது என சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதனை தவித்துவிட்டு, பொருளாதாரத்தை முன்னேற்றும் விவகாரத்தை குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வருகிறது.
மேலும், சமீபத்தில் வந்த ஜி.டி.பி அறிக்கையில் வளர்ச்சி குறைவு எனபது, பொருளாதாரம் நல்ல சூழல் இல்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. இந்த தாக்கமானது வர்த்தகம், ஏழை மக்கள், தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பெரிது பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை தீர்ப்பதற்காக மோடி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.