இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல், காவி திணிப்பும், இந்தி திணிப்பும் தடையுறாமல் அரங்கேறி வருகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் வழி பள்ளிகளில் இந்தி திணிப்பு, சமசுகிருத திணிப்பு, காவி அரசியல் சார்ந்த வழிமுறைகள் திணிப்பு அரங்கேறி வருகின்றன.
அது போல, குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்றம், ஒன்றியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள், ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் காவி வண்ணம், ஒன்றிய பொத்துறைகளில் இந்தி என, ஒன்றிய பா.ஜ.க அரசின் திணிப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஒன்றிய பொது நிறுவனமான BSNL நிறுவனத்தின் சின்னத்திற்கு காவி பூசிய ஒன்றிய பா.ஜ.க, தற்போது ஒன்றிய அரசின் மற்றொரு பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை முன்னெடுத்துள்ளது.
LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது. மொழி மாற்றும் பிரிவில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் இணையதளத்தை காண இயலுவதால், சராசரி மக்கள் இணையதளத்தை எளிதாக கையாள இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் எழுப்பி வரும் நிலையிலும், திணிப்பு நடவடிக்கைகளை முன்னெடித்து மக்களை வஞ்சிப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.