ஊட்டச்சத்தாக விளங்கும் அரசு !
கனிவான சிந்தனையுடன் திட்டங்களைத் தீட்டும் கருணை வடிவான முதலமைச்சராக விளங்கி வருகிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!
பெண்களின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் -
பணிக்குச் செல்லும் பெண்களின் செலவைக் குறைக்கும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயணம் -
பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் பசிப்பிணி போக்கும் காலை உணவுத் திட்டம் -
கல்லூரிக்கு வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் -
கல்லூரிக்கு வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் -
இந்த வரிசையில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
தாயுமானவராய், தந்தையுமானவராய் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை உயர்த்தி இருக்கிறது. இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டச் செயல்பாடுகளை அரியலூரில் தொடக்கி வைத்த மேடையில் தாய்மார்கள் சிலர் பேசிய பேச்சு மிகமிக உருக்கமானது. “எனது குழந்தை பிறக்கும் போது மிகமிகக் குறைவான எடையில்தான் பிறந்தது. என்ன செய்வது என்று நினைத்தேன். அதனை வளர்க்கும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை.
மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தால் நிறைய நல்ல பொருட்கள் கிடைத்தது. அதன் மூலமாக என் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு இப்போது வளர்ந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார்கள் அந்த தாய்மார்கள். குழந்தைகளுக்காக மட்டுமே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவுத் திட்டம், இளம் சிறார்களுக்கு இணை உணவுகள் வழங்கும் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மாண்புமிகு முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தினார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு தீவிர ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது. அதில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டது. இதனால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளார்கள்.
'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனைத்தான் அரியலூரில் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
2020 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியானது. நடப்பு ஆண்டுக்கான சர்வதேச பட்டினி குறியீட்டில் 94 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது என்பது தான் அந்த அறிக்கை ஆகும். ஊட்டச்சத்து குறைபாடு, உயரத்துக்கேற்ற உடல் எடை காணப்படாத 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, வயதுக்கேற்ற உயரம் காணப்படாத 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, சிறுவர்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
இதில் இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. "இந்திய மக்களில் 14 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர். நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 37.4 சதவிகிதம் பேருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை காணப்படவில்லை. அவர்களில் 17.3 சதவிகிதம் பேர் வயதுக்கேற்ப வளரவில்லை. நாட்டில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உயிரிழப்பு விகிதம் 3.7 சதவிகிதமாக உள்ளது. கர்ப்ப காலம் நிறைவடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளும் அதிகமாகி வருகிறார்கள். இவை குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது"- இதுதான் இந்தியாவைப் பற்றி அந்த பட்டினி குறியீட்டுபட்டியல் சொல்லும் விபரம் ஆகும். இதனை மனதில் வைத்து ஒன்றிய அரசும், அனைத்து மாநில அரசுகளும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் இதனை மனதில் வைத்துச் செயல்பட்டு நல்லதொரு திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து காட்டி, அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
திட சக்தியுள்ள குழந்தைகளை உருவாக்கும் - மக்கள் நலம் பேணும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குவதன் அடையாளமே இத்திட்டமாகும். "இவை எல்லாம் கட்சியைத் தாண்டி, அரசியலைத் தாண்டி, தேர்தலைத்தாண்டி செய்ய நினைப்பது ஆகும். மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்தவன் நான் என்றார் கலைஞர். எத்தனை மிகமிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றார் கலைஞர். மிக மிக மிக நலிந்த மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இது அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
விளிம்பு நிலை மக்கள் - பெண்கள் - குறிப்பாக குழந்தைகளின் நலன் பேணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதைக் கேட்க முடியாது. அப்படிக் கேட்க முடியாதவர்களுக்கு செய்ய நினைக்கிறேன் நான்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லிய சொல் என்பது கருணை வடிவிலான வாக்குமூலம் அல்லவா!