டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜே.என்.யூ துணைவேந்தர் உடந்தையாக இருந்ததாகவும், டெல்லி காவல்துறைக்கு தெரிந்தே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஜே.என்.யூ மாணவர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கோழைத்தனமான இந்த துணைவேந்தர், பின்கதவு வழியாக சட்டத்திற்கு விரோதமான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். மாணவர்கள், ஆசிரியர்களின் கேள்விகளில் இருந்து தப்பி ஓடிப் போகின்ற இவர் ஜே.என்.யூ-வில் அச்ச உணர்வு அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்.
அவருடைய அடியாட்களும், ஏ.பி.வி.பி., செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாக ஒட்டுமொத்தமாகப் பணி நியமனம் செய்வதை அதிகரிப்பதன் மூலம் உருவாக்கியுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜே.என்.யு.டி.எஃப்) என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற அடிவருடிகளும், ஏ.பி.வி.பி., கூட்டாளிகளும் வெறிகொண்டு அலைகின்றனர்.
ஏறக்குறைய எழுபது நாட்களாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தனியார்மயமாக்கல் பிடியிலிருந்து தங்களுடைய பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றுவதற்கான துணிச்சல்மிக்க போரில் ஈடுபட்டுள்ளனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை அமல்படுத்துவதில் இந்த துணைவேந்தர் பிடிவாதமாக இருக்கிறார்.
துணைவேந்தர் மற்றும் அவரது அடிவருடிகளின் விரக்தி மற்றும் மூர்க்கத்தனத்தின் விளைவாகவே ஞாயிறன்று வன்முறை நடந்திருக்கிறது. நடந்த நிகழ்வுகளின் காலவரிசையானது, வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏ.பி.வி.பி., குண்டர்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுத்த டெல்லி காவல்துறையினரின் வெட்கக்கேடான செயலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
நீண்ட நாட்களாக எங்களுடைய எதிர்ப்பை நிர்வாகத்தால் தகர்க்க முடியவில்லை. ஜனவரி 4 முதல், ஏ.பி.வி.பி.,யைச் சார்ந்தவர்கள் துணைவேந்தரின் அடியாட்களாக வந்து மாணவர்களை அடித்து உதைத்தனர். தாக்குவதற்காக லத்திகள் மற்றும் குழாய்களை அவர்கள் பயன்படுத்தினர்.
ஞாயிறன்று அவர்கள் வெளியில் இருந்து குண்டர்களை, குறிப்பாக குற்றச் செயல்கள் புரிவதை வழக்கமாகக் கொண்ட சதீந்தர் அவானா தலைமையில் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களை வரவழைத்தனர்.
ஜே.என்.யு., வளாகத்தில் உள்ள பெரியார், எஸ்.எஸ்.எஸ் 2, மஹி மந்தவி மற்றும் குறிப்பாக சபர்மதி ஆசிய விடுதிகளில் நடந்த தாக்குதல்களில் லத்திகளும், இரும்புத் தடிகளும், பெரிய கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெளியில் இருந்து வந்த குண்டர்கள் கண்ணாடிகளை உடைத்து, கார்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த உணவுக்கூடத் தொழிலாளர்களையும் தாக்கியுள்ளனர். மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சபர்மதியில் உள்ள மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த மாணவிகளை மிரட்டி தாக்கியுள்ளனர்.
துணைவேந்தரின் உத்தரவின் பேரில் ஆண் குண்டர்கள் பெண்கள் விடுதிகளுக்குள் சென்று கதவுகளைத் தாக்கி உடைப்பதற்கு ‘சைக்ளோப்ஸ்’ பாதுகாப்பு படையினர் ஒத்துழைத்துள்ளனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினரைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. தாக்கப்பட்ட பல ஆசிரியர்களுடன், பேராசிரியர். சுசரிதா சென் தலை மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஜே.என்.யூ.,வில் நடந்தது அனைத்தும் முழுமையாக ஏ.பி.வி.பி., உறுப்பினர்களாலேயே இயக்கப்பட்டது. வெளியாட்களின் நுழைவுக்குத் திட்டமிட்ட யோகேந்திர பரத்வாஜ் போன்ற கூலிப் படை ரவுடிகளின் செயல்பாடுகள் வாட்ஸ்-ஆப் செய்திகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜே.என்.யூ., மாணவர் பேரவையின் பொதுச் செயலாளரை குண்டர்கள் தாக்கினர். தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். விடுதிகளுக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்த மாணவிகளை ஏ.பி.வி.பி., அடித்து உதைத்தது. சில மாணவிகளுக்கு கடுமையான காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன.
ஜே.என்.யூ.,வை அழிக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் திட்டத்தில் இந்த துணைவேந்தர் நான்கு ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 2016-ம் ஆண்டில் ஜே.என்.யூ மீது அவதூறு ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் நடத்திய திட்டத்தில் இவருக்கும் பங்கு இருந்தது. மாணவர் நஜீப்பைத் தாக்கிய ஏ.பி.வி.பி., குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.
மாணவர் சேர்க்கையை குறைத்ததன் மூலம் அடுத்த தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க முயன்ற அவர் சமூக நீதியைக் கொலை செய்தார். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணர்திறன் குழுவை (GSCASH) கலைத்து, அதுல் ஜோஹ்ரி போன்றவர்களை அவர் பாதுகாத்தார். உணவகங்களை மூடுவது, இரவு வெளியே வருவதற்கு தடை விதிப்பது ஆகியவற்றின் மூலம் கருத்து வேறுபாடு கொள்ளும் மற்றும் விவாதம் செய்யும் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முயன்றார்.
துணைவேந்தர் மிஸ்டர் மமிதலா ஜகதீஷ் குமார், இது நீங்கள் வெளியேற வேண்டிய நேரம்”.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.