டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த போராட்டத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் அனுராக் காஷ்யப், டாப்ஸி பானு, ஜோயா அக்தர், தியா மிர்சா உட்பட பலர் பங்கேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் அனில் கபூர் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்தார். அதில், “ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சியை பார்த்தவுடன் நான் அமைதியிழந்து விட்டேன். நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. நடந்த சம்பவம், கண்டனத்துக்குரியது. வன்முறையினால் எதையும் கொண்டு வரமுடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரபல நட்சத்திரமான ஆலியா பட், “நாட்டின் பிரிவினை, ஒடுக்குதல் மற்றும் வன்முறையை தூண்டும் சித்தாந்தங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் ஆதித்யா ராய் கபூர், “நமது நாட்டில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இதனை செய்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர்கள் ஸ்வாரா பாஸ்கர், சபானா ஆஸ்மி, ரிச்சா சத்தா, முகமத் ஜீசான் ஆயூப் மற்றும் டாப்சி பன்னு, எழுத்தாளர் கவுரவ் சோலாங்கி மற்றும் தயாரிப்பாளர்கள் அபர்ணா சென், விஷால் பரத்வாஜ் மற்றும் அனுபவ் சின்கா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.