இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 70 ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநில மக்களை வீட்டுச் சிறையில் அடைத்து சர்வாதிகார போக்கை மோடி அரசு நிலைநாட்டி வருகிறது.
அதேபோல, சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், தாழ்த்தமக்களை வெளியேற்ற வேண்டும் என்ற முயற்சியாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் என கொண்டுவந்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு.
மதங்களை வைத்து நாட்டு மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தி மதவாத அரசியலில் மோடியின் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவது அதன் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. இந்த செயலுக்கு நாட்டின் பிற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா அண்மையில் குஜராத் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், “மதம் இல்லாத அரசியல் அர்த்தமற்றது. மதம் இல்லை என்ரால் அரசியல் கொள்கையற்றதாக மாறிவிடும். மனிதனின் நன்னடத்தைக்கு வழிகாட்டியாக மதம் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்
மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியர்கள் முன்னிலையில் ஜே.பி.நட்டா இவ்வாறு பேசியது சர்ச்சைக்குள்ளானதோடு, கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது