பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரள மாநில முதல்வர்களும் கூறியுள்ளனர்.
மேலும், கேரள அரசு ஒரு படி மேலே சென்று கேரள சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள மக்களின் பிரதிநிதியாக பல போராட்டங்களை எதிர்கட்சியுடன் இணைத்து ஆளும் கட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல, தங்கள் மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி மேற்கு வங்கம், டெல்லி உட்பட 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யாத ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு பினராயி விஜயன் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நமது இந்திய நாட்டின் அடிப்படைத் தத்துவமே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான். ஆனால், ஆளும் அரசு ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைக்கிறது. இதனை நாம் அனுமதிக்க கூடாது.
இப்போது நமது ஜனநாயக மதசார்பின்மையை பாதுகாக்கும் கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதனால் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு சமூக நன்மைக்காக ஒன்றிணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க தயாராக வேண்டும். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் கடந்த 31ந் தேதி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதுபோல், அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தனது முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.