டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காக சுங்கச்சாவடிகளில் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிக்குள் நுழையும் போது தானாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். இதற்காக மணிக்கணக்கில் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஃபாஸ்டேக் அட்டை பற்றாக்குறைகள் இருந்ததால் மக்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டனர். தற்போது ஃபாஸ்டேக் அட்டை பெற்றிருந்தாலும் மக்கள் அவதியுறுகின்றனர்.
பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் தானாக பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதால், ரொக்கமாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு சுங்கச்சாவடியை விட்டு சிறிது தூரம் சென்றதும் வங்கிக்கணக்கில் இருந்து மீண்டும் பணம் எடுக்கப்படுகிறது.
இது போல இரண்டு முறையிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் வணிக ரீதியிலான கனரக வாகனங்களே இந்த ஃபாஸ்டேக் குளறுபடியால் பாதிக்கப்படுகின்றனர்.