மக்களை பிளவுப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த மோடி அரசு முயற்சித்தாலும், மக்களிடையே ஒற்றுமை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
மதசார்பற்ற இந்திய நாட்டில் மக்கள் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து போராடி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்களுடன் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.
அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ,கேரள மாநிலத்தில் மூவாட்டுப்புழா முதல் கோத்தமங்கலம் வரை இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் பேரணி நடைபெற்றது. சுமார் 10 கி.மி தூரம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் அரசியல் கட்சியனர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி முடியும் போது இஸ்லாமியர்கள் தொழுகைக்கு நேரம் வந்தது. திரும்பி தங்கள் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினால் நேரம் கடந்து விடும் என்பதால் கொத்தமங்கலத்தில் உள்ள தேவாலயத்தில், தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.
எந்த தயக்குமும் இன்றி, தொழுகை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினார்கள். மேலும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேவாலயத்தில் செய்துக்கொடுத்தனர். தொழுகைக்கு தேவாலயத்தில் உள்ள ஒலி பெருக்கியை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்தனர்.
தேவாலயத்தில் ஒலித்த இஸ்லாமியர்களின் தொழுகை சத்தம் கேரள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம், இந்தியா மதசார்பற்ற நாடு என்பதை பிரிவினை பேசும் வலதுசாரிகளின் காதில் சத்தமாக உரைத்திருக்கிறது. முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேரும் சகதியுமான இந்து, கிறிஸ்துவ தேவாலயங்களை இஸ்லாமிய சகோதரர்கள் சுத்தம் செய்ததையும் நினைவுப்படுத்தினார்கள். தங்களுக்குள் மத வேற்றுமை இல்லை என்பதை கேரள மக்கள் நிரூபித்துள்ளனர்.