பா.ஜ.க ஆளும் உ.பி மாநிலத்தில், இருந்து வெளி வரும் தகவல்கள் அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி காலகட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபடுவர்களை அம்மாநில பா.ஜ.க அரசு கைது செய்தும் சிறையில் அடைத்தும், மாணவர்கள் மீது வழக்குப் பதிந்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் ஒடுக்குமுறையை கையாண்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற பேரணியில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது அமைதியாக நடைபெற்ற போராட்டம் போலிஸாரின் அடக்குமுறையால் கலவரமானது. அப்போது கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பேரில், உத்தர பிரதேச போலிஸார் போராட்டக்காரர்கள் மீது கொடூரமாகத் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் 76 வயதாகும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி படுகாயமடைந்தார்.
பலத்த காயமடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தாராபுரியை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார்.
ஆனால், திடீரென நடுவழியில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி சில கி.மீ., தூரம் வரை நடந்தே சென்றார். ஒருகட்டத்தில், தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் அமர்ந்து சென்றார். அப்போது அவரை போலிஸார் தடுக்க முயற்சி செய்ததால் பெரும் பதற்றம் உருவானது.
போலிஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பிரியங்கா காந்தி, தாராபுரி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இது உ.பி அரசியலில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவின் தலைப்புச் செய்தி ஆனது.
இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலிஸார் தடுத்தும் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்த குற்றச்சாட்டுக்காக லக்னோ காவல்துறை பிரியங்கா காந்தியை அழைத்துச் சென்ற காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு 6,100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதற்கான ரசீதும் கொடுத்துள்ளனர்.
’அரசியல் கட்சித் தலைவரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் தடுத்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி நடந்த காவல்துறைக்கு அபாராதம் எதுவும் இல்லையா?’ என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், போலிஸார் நடத்திய இழுபறியின்போது, போலிஸ் ஒருவர் பிரியங்கா காந்தியின் கழுத்தை பிடித்து நெறித்தார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.