வட இந்தியாவின், அமைதிப் பள்ளத்தாக்கு, அமைதியும் அழகும் ஒருங்கே இணைந்த இடம் என்றால் அது காஷ்மீர்தான். எப்போதும் பனி சூழ்ந்த மலைப்பகுதியும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த காஷ்மீரின் வனப்பும் நம்மை கொள்ளை கொள்ளும். இதற்கு பனிகள் நிறைந்த மலைப்பகுதியும் அதன் தொடர் வனப்பகுதிகளுமே காரணம்.
இந்த இயற்கைதான் அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சிறந்த அரணாகத் திகழ்கிறது. ஆனால், இந்த நிலைமையை நீடிக்கவிடாமல், கடந்த 2018-ம் ஆண்டு, ஜூன் மாதம் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பா.ஜ.க விலக்கிக் கொண்டு அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கவிழ்த்தது.
பின்னர் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்தது. அதற்குபிறகு, காஷ்மீருக்கான சிறப்பு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றப்பட்டது.
இதற்கு முன்னதாகவே, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், துணை ராணுவப்படையினரும் காஷ்மீரில் குவித்து பா.ஜ.க அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெறாமல் கட்டுப்படுத்தி, அம்மாநிலத்தையே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி, காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது.
பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை அனைத்துமே, இயற்கை வளங்களை அழித்து கார்ப்ரேட்டுகளுக்கு ஏற்றபடி அந்த மாநிலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காகவே என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலங்களை அழித்து ராணுவத்திற்கும் சாலை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் நிலவிய அசாதர சூழலுக்கு பிறகு அங்கு அதிக அளவிலான ராணுவவீரர்களை குவித்தது. தற்போது அவர்களுக்கு தங்குமிடங்கள் கட்டுகிறோம், சாலை வசதியை ஏற்படுத்துகிறோம் எனக் கூறி வனப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.
இதனைக் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, அக்டோபர் 2-ம் தேதி 17 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வனத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில், ராணுவத்தினரின் 198 திட்டங்களின் தேவைக்காக, வனப்பகுதி நிலங்களில் 727 ஹெக்டேர் பகுதியை ராணுவத்தினருக்கு ஒப்படைப்பதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதன்மூலம் பெறப்படும் 60% நிலங்களை சாலை அமைப்பது, இதர கட்டுமான பணிகளுக்கும், 33 சதவிகித நிலங்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் தங்குமிடம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ராணுவத்தினரின் தங்குமிடம் அமையவிருக்கும் 243 ஹெக்டேர் பகுதியில் தான் குல்மார்க் வனவிலங்குகள் காப்பகம், கேமில் ஜீலம் பள்ளத்தாக்கு, சபா மற்றும் ஜம்மு வனப்பகுதிகள் உள்ளன. மேலும், இந்த பகுதியில் சுமார், 1,847 அடர்ந்த மரங்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி, மரங்களை வெட்டுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு , வனத்துறை ஆலோசனைக் குழுவையும் கலைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகாரத் திட்டம் தற்போது அங்குள்ள வன ஆர்வலர்கள் மற்றும் சில வனத் துறை அதிகாரிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பல வனத்துறையினர் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில், ’ஜம்மு காஸ்மீரில் இதுவரை 79 வன அதிகாரிகள் காடுகளை பாதுகாக்க முயற்சிக்கும் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
“வனப்பகுதி உள்ளவரை காஷ்மீர் மக்களின் உணவுக்குப் பஞ்சமில்லை” என்று காஷ்மீரைச் சேர்ந்த புகழ்பெற்ற துறவி ஷேக் உல் ஆலம், 15-ஆம் நூற்றாண்டிலேயே கூறியுள்ளார். அவரின் இந்த வாசகம், காஷ்மீரின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இப்போதும் பொறிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரின் ஆட்சியாளர்களும் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால், தற்போது மோடி அரசாங்கம் காடுகளை அளித்து அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தைக் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தனி உரிமைகளோடு இருந்து வந்த காஷ்மீரை எப்படியாவது தங்கள் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து, அம்மாநிலத்தை கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதே பா.ஜ.க.,வின் வெறியாக இருந்தது, தற்போது இந்த திட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.