காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.
அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்று எச்சரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன.
இதனால் இந்தியா பெரும் பாதிப்புகளை சந்திக்க இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வரும் இந்த நிலையில், டிஸ்கவரி சேனல் ‘2050 இந்தியா’ என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தால் இந்தியா சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது.
அதற்கான முதல் டீசர் வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பிரச்னை, அதனால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், 2050ம் வருடத்தில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தேசிய அளவிலும், உலகளவிலும் அந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தைக் காக்கத் தவறினால் இந்தியா என்னவாகும் என்பதை இப்படம் காட்டுவதால் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் இப்படத்தின் டீசர் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.