இந்தியா

"70 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாதபோது CAA-வை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?"- மலேசிய பிரதமர் கேள்வி!

70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்னையும் இன்றி வாழ்ந்து வரும் சூழலில் குடியுரிமை சட்டத்தை தற்போது கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என மலேசிய பிரதமர் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"70 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாதபோது CAA-வை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?"- மலேசிய பிரதமர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியிருப்பது சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ‘இந்து ராஷ்டிர’த்தை உருவாக்கவே என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றியபோதே, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் ) கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சத்தோடு இருப்பதாகவும், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாட்டை குறைத்து மதிப்பிட வைக்கிறது” எனவும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் தனது கருத்தை பதிவு செய்தது.

"70 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாதபோது CAA-வை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?"- மலேசிய பிரதமர் கேள்வி!

அதனையடுத்து தற்போது, மலேசியா பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மதச்சார்பற்ற நாடாக விளங்கும் இந்தியாவில் குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது.

இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தியா எடுத்ததைப் போன்றதொரு நடவடிக்கையை மலேசியா அரசு எடுத்தால் என்னவாகும்? நாட்டில் மிகப்பெரிய குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். மேலும், இதனால் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எல்லா மதத்தவரும் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?" எனக் கேள்வி எழுப்பினார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மலேசிய பிரதமர் கூறிய கருத்து உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாகவும், இந்தியாவின் உள்துறை விவகாரங்களை பற்றி மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.

முன்னதாக, ஐ.நா மற்றும் அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்கான ஆணையம் கண்டனம் தெரிவித்தபோது இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories