மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைமையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்பினர், தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” எனத் தெரிவித்துள்ளார்.