எதிர்ப்பைத் தாண்டி பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்துக்கும் , தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக நாடு முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரைத்துறை, இலக்கியம் என பல்துறை சார்ந்த பிரபலங்களும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பி.சி.சி.ஐ., தலைவருமான கங்குலியின் மகள் சனா கங்குலி , குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஷ்வந்த் சிங் எழுதிய "The End of India" என்ற புத்தகத்தில் இருந்த சில குறிப்புகளை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் "இன்று நாம் முஸ்லிம்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் அல்ல என்பதால் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்வோர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சங் அமைப்பு ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் "மேற்கத்தியமயமாக்கப்பட்ட" இளைஞர்களையும் குறிவைத்து வருகிறது.
நாளை அது ஸ்கர்ட் அணியும் பெண்கள், இறைச்சி சாப்பிடுவோர், மது அருந்துவது, வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது, பற்பசை, அலோபதி மருத்துவம், முத்தம் அல்லது கை குலுக்கல் போன்றவற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொன்னால் போதும் என்பார்கள். யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நம்பினால் இதை நாம் உணர வேண்டும்." இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. சனா கங்குலியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நாடு முழுவதும் வைரலானது.
இதனையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுரவ் கங்குலி, “தயவுசெய்து இந்த விவகாரத்தில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மையானதல்ல. அவள் சின்ன பெண். அரசியல் பற்றி தெரிந்துகொள்ளும் வயது அவளுக்கு இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
கங்குலியின் இந்த பதிவுக்கு பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பி.சி.சி.ஐ.,யின் செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.