பா.ஜ.க அரசு இயற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 15ம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது மாணவர்கள் மீது போலிஸாரும், துணை ராணுவப்படையினரும் தடியடி தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பேசுபொருளானது. போலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினர்.
மேலும், ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க எம்.பியும் முன்னாள் கிரிகெட் வீரருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கவுதம் கம்பீர், “மாணவர்கள் மீது போலிஸார் தடியடியில் ஈடுபட்டது தவறுதான். ஆனால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததால் போலிஸார் தடியடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வன்முறைகள் நடைபெறும் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள தடியடி நடத்துவதில் தவறு ஏதும் இல்லை. போராட்டம் அமைதியான முறையில் நடந்திருந்தால் இப்படியான விளைவு இருந்திருக்காது.” எனக் கூறியுள்ளார்.