இந்து ராஷ்டிராவை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கும் பா.ஜ.கவின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நேற்று டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் உத்தர பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பா.ஜ.கவால் தூண்டிவிடப்பட்ட போலிஸாரும் துணை ராணுவப்படையினரும் மாணவர்கள் மீது தடியடி மற்றும் வன்முறையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலிஸாரின் இந்த அராஜக செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, அகமது படேல், அம்பிகா சோனி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தர்ணாவில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.